திருப்பத்தூர் அருகே நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட்ட 27 ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், சின்ன வெங்காயபள்ளி பனந்தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் 40 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் செய்து வருகிறார். கோடை காலம் என்பதால் ஆடுகளை பல நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால், ஆடுகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்துள்ளார். இதற்காக, திருப்பத்தூர் அரசு தலைமை கால்நடை மருத்துவர் பிரசன்னாவை அணுகியுள்ளார். இவரின், உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவர் ராஜா வளர்த்து வந்த ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.
தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 செம்மறி ஆடுகள் அடுத்தடுத்து வலிப்பு ஏற்பட்டு இறந்து போய் விட்டன. தகவலறிந்த தலைமை கால்நடை மருத்துவர் பிரசன்னா உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். ஆடுகள் உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகே ஆடுகளின் இறப்புக்கான காரணம் தெரிய வரும். இறந்து கிடந்த ஆடுகளை கண்டு ராஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் கதறியது வேதனையை ஏற்படுத்தியது.
ராஜா குடும்பத்தினருக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ 2.5 லட்சம் என்று சொல்லப்படுகிறது. ஆடுகளின் உரிமையாளர் ராஜாவுக்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.