21ஆவது திருத்தத்தின் பின்னர் எவ்வளவு காலம் போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம் என்பதை காலி முகத்திடலில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை வேறு எங்காவது கொண்டு செல்வதா, இல்லையா என்பது அவர்களின் முடிவு என்றும் தெரிவித்த அவர், அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் போராட்டக்காரர்கள் விடயத்தில் தலையிடப் போவதில்லை என்றும் கூறினார்.
அதோடு , அவர்கள் போராட விரும்பினால், நிச்சயமாக அங்கேயே போராட்டத்தை நடத்தலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான என்ரீ டிவிக்கு வழங்கிய நேர்காணலில் தெரித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பிரதமர் பிரதமராக வருவதற்கு வேறு யாரும் தயாராக இல்லாததால் தான் அப்பதவியை ஏற்றுக் கொண்டதாகவும். நான் இந்த சவாலை ஏற்கவில்லையென்றால், நாடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் நெருக்கடியான நிலையில் ஆட்சி செய்யும் பிரதமர் நான். அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் உள்ளது.
இரண்டு பிரச்சினைகளையும் தவிர்க்க முடியாது. எனது கவனம் உண்மையில் பொருளாதாரப் பிரச்சினைகளில் தான் இருக்கிறது . அடுத்தது அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில், என்ன நடக்கப் போகிறது என்பதை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும், ஆனால் பொருளாதாரச் சூழல் இயல்பு நிலைக்கு வரும்போது அதைச் செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ள பிரதமர், சர்வதேச நாணய நிதித்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் சாதகமான நிலைமை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சர்கள் மீதான ஊழல்
ராஜபக்ஷக்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று இலங்கையின் பெரும்பாலான மக்கள் கோருகிறார்கள். இலங்கையை இந்த நிலைக்கு இட்டுச் சென்றதற்காக கோத்தாபய ராஜபக்ச அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால், நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக போராடும் இளைஞர்கள் அரசியல் கட்டமைப்புகளுக்குள் வர வேண்டும் என தெரிவித்த பிரதமர் , நாங்கள் அமைத்த குழுக்களில் பங்கு கொள்ளுங்கள், அரசாங்கத்துடனும் மக்களுடனும் உரையாட முடியும் என தம் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் எப்போது?
மேலும் அரசாங்கம் வீட்டுக்கு போனால் தேர்தலை நடத்தும் நிலை இல்லை என்றும், பொது மக்கள் தற்போது தேர்தலை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நாட்டில் தேர்தல்கள் 2023 இன் இறுதியில் அல்லது 2024 இன் தொடக்கத்தில் தான் நடக்கும் என்றும் கூறினார்.
அதேவேளை நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில், இலங்கை மக்களுக்க்கு இந்திய வழங்கிய பொருளாதார உதவிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது நன்றி தெரிவித்தார்.