தன்னை பற்றிய செய்திகள் வெறும் வதந்தி – தினேஷ் வீரக்கொடி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக தம்மை நியமிக்க பிரதமர் செயற்படுவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முன்னாள் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் தாம் அறிந்திருக்கவில்லை எனவும், அவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் தாம் முன்வைக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், நாட்டுக்காக தாம் முன்வந்து செயற்படுவதாகவும், பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திறைசேரி விவகாரங்களுக்கான ஆலோசகராக தினேஷ் வீரக்கொடியை நியமித்துள்ளதாக கடந்த வாரம் எமக்கு தெரிவிக்கப்பட்டது.
வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் பல முன்னணி தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நிதித்துறையில் வீரக்கொடியின் பரந்த அனுபவம் இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் மற்றும் தொடர்புடைய பிரிவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.