பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளதாகவும், 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜி தர்மகீர்த்தி மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.