தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் ரணில் பிரதமர் பதவியை இழக்க நேரிடும். இதன்படி, அதிகாரம் தொடர்ந்தும் பசில் ராஜபக்சவிடமே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் வழங்கும் ஆதரவின் காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளது.
நாட்டின் சகல தரப்பினரும் இன பேதமின்றி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்றில் கட்சிக்கு ஒரு ஆசனத்தை கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராகியுள்ளார். ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக அவர் பிரதமராகியுள்ளார்.
எனினும் பசில் ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மறுப்பாராயின் மீண்டும் பிரதமர் பதவியிழக்க நேரிடும். இதன்படி, அதிகாரம் தொடர்ந்தும் பசிலிடமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.