தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் குறித்த மாபெரும் கருத்துக்கணிப்பு மக்கள் மையம் என்னும் கிராமிய மக்கள் மற்றும் பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட்டது.
மேலும் தமிழக மக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்து வரும் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் குறித்தும் இந்த கருத்துக்கணிப்பில் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
குறிப்பாக கூட்டுறவு கடன் தள்ளுபடி, குடிமராமத்து திட்டம், தொடர் மின்சாரம் வழங்குவது, பொங்கல்பரிசு, அம்மா மினி கிளினிக்குகள் திட்டம், ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்தது, ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டம், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கிய திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பற்றி மக்களிடம் கருத்து கணிப்பின் போது கேட்டதற்கு, இவை அனைத்தும் அதிமுக அரசின் சிறந்த செயல்பாடுகள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், அதிமுக இந்த கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் தமிழகத்திற்கு அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று 36 சதவீதம் பேரும், ஸ்டாலின் என்று 34 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
இதைப்போல், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதா? என்ற கேள்விக்கு ஆம் என்று 51% பேர் தெரிவித்துள்ளனர். மீண்டும் தமிழகத்திற்கு இலவச திட்டங்கள் தேவையா? என்ற கேள்விக்கு தேவையென 29 சதவீத பேரும், தேவையில்லை என்று 61 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு நன்று என்று 43 சதவீதம் பேரும், மோசம் என்று 32 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக மக்கள் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு என்ற கேள்விக்கு அதிமுகவிற்கு என்று 32 சதவீதம் பேரும், திமுகவிற்கு 31 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
இதிலிருந்து அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 112 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 80 முதல் 90 தொகுதிகள் வரை வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. சரியாக கணிக்க முடியாத தொகுதிகள் என 24 தொகுதிகள் உள்ளன
எனவே மக்கள் மையக்கருத்து கணிப்பின்படி, வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் அதிமுக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.