கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற 3வது நாளே அந்த நாட்டுக்கு சுமார் 15,000 கோடி ரூபாயை வழங்க ஜப்பான் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 360 ரூபாயாக சரிவை கண்டுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கேவின் வருகை அந்த நாட்டு பொருளாதாரத்துக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கான சமிஞ்சைகளை அளித்துள்ளன.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்றாகிவிட்ட நிலையில் அதனை அதிகரிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கே இறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் பல நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஜப்பான் மட்டும் சுமார் 15,497 கோடி ரூபாயை கடனாக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்றுமதி நிதி அளிப்பு நிறுவனமான இந்திய எக்சின் வங்கி இலங்கைக்கு 10,000 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதாரம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ரணில் விக்ரமசிங்கே ஈடுபடவுள்ளார். தற்போது இலங்கையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுட ராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் இரண்டு நாட்களாக போராட்டங்கள் குறைந்துள்ளன.
எனினும் ரணிலுக்கு எதிரான மக்களின் கோபம் இதுவரை குறையவில்லை என்பது போராட்டம் மூலம் தெரியவந்துள்ளது.