இலங்கையின் தலைவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு மாகாநாயக்கர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ற போதும் ஜனாதிபதியும், பிரதமரும் காது கேளாதது போலவும், கண் தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றனர்.
தற்போது நாட்டில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக ஒன்று திரண்ட அனைவருக்கும் வெறுத்து போயுள்ளது. வீதிகளில் நிலையான வீதித்தடைகளை பொருத்தியுள்ளனர். சில வீதித்தடைகளில் முட்கம்பிகள் இருந்தன.
இதனால் மக்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். கண்களில் ஏதும் குத்துமாக இருந்தால் காலம் முழுவதும் பார்வையற்றவராகும் நிலை ஏற்படலாம்.
இப்படியான கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான இயக்கங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. எனினும் கருத்துக்களை தெரிவிப்பது மாத்திரம் போதாது.
இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க வேண்டும். இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
நாங்கள் ஒரு கட்சியாக அதற்கான நடவடிக்கையை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த நாட்டின் தலைவராக பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இப்படி செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை.
சிலர் தெரிவித்தார்கள் ஹிட்லர் போன்ற ஒரு தலைவர் தேவையென, அப்படியாயின் ஹிட்லர் போன்ற தலைவராகவா முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.