புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதால் மாத்திரம் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என எண்ணுவது நகைபுக்குரிய விடயம் ன ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு தற்போது மிகவும் பயங்கரமான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. ஒரு வாரத்திற்கு முன்னர் ஆரம்பமான மக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாரங்களாக நாடு அராஜக நிலைமையை நோக்கி செல்லும் போது, ஜனாதிபதியும் அரசாங்கத்தினரும் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்பது எமக்கு பெரிய கேள்வியாக இருக்கின்றது.
ஸ்திரத்தன்மை ஏற்படுத்தி அரசாங்கமாக மீண்டும் செயற்படும் நோக்கில் புதிய அமைச்சரவை நியமித்துள்ளதாக ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளன.
ஒரு வாரமாக மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் காலிமுகத் திடலில் கூடி இருந்து கோட்டா கோ ஹோம் என ஏன் கூறுகின்றனர். ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
மக்கள் ஏன் நிராகரிக்கின்றனர். நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும் மக்களுக்காக செயற்படவும் அவர் தவறியுள்ளனர் என்பதே இதற்கு காரணம்.
ஜனாதிபதியும் அரசாங்கத்தினரும் தோல்வியடைந்து விட்டனர் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இது மக்களின் அரசாங்கம் என்றால் எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் இருக்கின்றன. முதலாது மக்களுக்கு தடையின்றி விநியோகங்களை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனால், தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போல் அமைச்சரவையை மாற்றுவதால், இந்த பிரச்சினை தீரானது.
மக்கள் புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு கோரவில்லை. ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்றே மக்கள் கோருகின்றனர் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.