அதிகாரத்தை கைவிடாததன் மூலம் தமது வாழ்க்கை மட்டுமல்லாது மற்றவர்களின் வாழ்க்கையும் அழிந்து போகும் என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற பெரிய வெள்ளி திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யேசு கிறிஸ்து எதனை கைவிடுமாறு கூறுகிறார். கைவிடுங்கள், சட்ட ரீதியாக எம்மிடம் இருக்கும் அனைத்தையும் கைவிட்டு விடுதலையாகுமாறு கூறுகிறார். நாம் குறைந்தது 100 ஆண்டுகள் வாழ முடியும். நாம் அனைவரும் அனைத்தையும் கைவிட்டு செல்ல வேண்டும்.
நாம் அனைவரும் வளங்கள், செல்வங்கள், அதிகாரம் ஆகியவற்றை கைவிட்டு செல்ல வேண்டும். இவற்றை பேராசையில் பிடித்துக்கொண்டு தமது வாழ்க்கையையும் ஏனையோரின் வாழ்க்கையையும் ஏன் பாழ்ப்படுத்த வேண்டும் எனவும் பேராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேராயரின் இந்த கருத்தானது கோட்டாபய அரசின் மீது அவர் கோபத்தில் இருக்கின்றமையை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்