பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் குளியலறையில் இறந்துகிடக்க, அவரது வயிற்றிலிருந்த குழந்தை மாயமாகியிருந்தது.நேற்று மதியம், Pamella Ferreira Andrade Martins (21) என்ற அந்த இளம்பெண், கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
அவரது குழந்தையை பொலிசார் தேடிக்கொண்டிருக்க, அதே நேரத்தில், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு 22 வயதுள்ள ஒரு பெண், குழந்தை ஒன்றுடன் சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தை இறந்துவிட்டிருக்கிறது.வீட்டில், தானே குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், குழந்தையுடன் படியிலிருந்து இறங்கும்போது தடுக்கி விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் அந்த பெண்.
ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமடையவேயில்லை என்பது தெரியவந்தது.ஆகவே, பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிஸ் விசாரணையில், அந்த பெண் கர்ப்பமுற்றிருப்பதுபோல் நடித்துவந்ததும், சம்பவம் நடப்பதற்கு முன்தினம், அவர் Pamellaவுடன் கூட இருந்ததும் தெரியவந்துள்ளது.
குழந்தை எப்படி இறந்தது என்பதை அறிவதற்காக, அதற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரு கர்ப்பிணிப்பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.