யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்திருந்தார்.
எனினும் குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் இருந்து, வந்திருந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் பொலிஸார் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்திருந்தனர்.
இதேவேளை பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்திலிருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமரை வரவேற்கும் வகையில் கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.