சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அரசியல் தகித்துக்கொண்டு இருக்கிறது.. அமெரிக்கா ஏற்கனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக திணறி வருகிறது. இந்த நிலையில்தான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது.
உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறி இறங்கி வருகிறது. கடந்த வாரம் 130 டாலருக்கும் அதிகமாக விற்கப்பட்ட ஒரு பேரல் நேற்று 100க்கும் கீழ் சென்று இன்று மீண்டும் 109.4 டாலரை தொட்டுள்ளது.
இதனால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மறுத்துள்ள நிலையில், அமெரிக்காவிலும் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில்தான் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு குறைந்த விலையில், தள்ளுபடியோடு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்தது.
இதையடுத்து இந்தியாவும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் பொருட்டு ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு எடுத்தது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனமும் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்தியாவில் இப்போதைக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனம் இரண்டும் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்.
மேலும் மங்களூர் பெட்ரோல் நிறுவனமும் இதேபோல் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி மங்களூர் நிறுவனம் 1 மில்லியன் பேரல் ஆயில் வாங்க முடிவு செய்துள்ளது. உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடைகளை விதைப்போம் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலையில்தான் மேற்கு உலக நாடுகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்தியா கூடுதல் எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் இந்த முடிவு காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்து இருந்தது.
அதில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது. அமெரிக்கா போட்டு இருக்கும் பொருளாதார தடைகளுக்கு எதிரானது இது என்று சொல்ல முடியாது. இந்தியா விதிகளை மீறுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இந்தியா வரலாற்றில் தவறான பக்கம் செல்ல கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.