என்ன பிரச்சனையாக இருந்தாலும் எமது அரசாங்கம் மற்றும் அமைச்சர்களுடன் பேசி தீர்வைப் பெற முடியும். அதைவிடுத்து பாதைகளை மறித்து, ஆர்ப்பாட்டம் செய்தோ, கையெழுத்து போராட்டம் நடத்தியோ தீர்வைக் காண முடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா – சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம் செய்த பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வவுனியாவிற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவுடன் சமனங்குளம் கோவில் பிரச்சனை தொடர்பில் தெரியப்படுத்தினேன்.
ஓரிரு நாட்களில் அந்த கோவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. தொல்பொருட் திணைக்கள அனுமதியுடன் அவர்கள் கட்டுமானப் பணியை முன்னெடுக்க முடியும்.
அமைச்சரிடம் கேட்டதிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்து அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்துள்ளார். என்ன பிரச்சனையாக இருந்தாலும் எமது அரசாங்கம் மற்றும் அமைச்சர்களுடன் பேசி தீர்வைப் பெற முடியும்.
அதைவிடுத்து பாதைகளை மறித்து, ஆர்ப்பாட்டம் செய்தோ, கையெழுத்து போராட்டம் நடத்தியோ தீர்வைக் காண முடியாது. என்ன பிரச்சனை என்றாலும் அரசாங்கத்துடன் பேசியே தீர்வு காண முடியும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.