சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பாலும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியில் இருந்து மீளும் வகையிலான நிவாரண பொதியை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதிகளை செய்ய டொலர் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், இலங்கைக்கு வந்துள்ள கப்பல்களில் இருக்கும் எரிபொருட்களை கூட இறக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
மேலும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டு வருகிறது.