இலங்கை – இந்திய கடற் தொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சி்னையை தீர்ப்பதற்காக இருதரப்பு பேச்சுவார்தையை ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 41 தமிழக கடற் தொழிலாளர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
இந்திய- இலங்கை கடலில் அடிக்கடி இடம்பெறுகின்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தமிழக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தும் வகையிலும் அச்சமூட்டும் வகையிலும் இடம்பெற்று வருகின்றன.
எனவே மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் கூட்டு முயற்சியின் மூலம் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் முக்கியம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கை படையினரால் கைப்பற்றப்பட்ட தமது படகுகள் ஏலம் விடப்பட்டமை மற்றும் கடலில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களை கண்டித்தே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.