ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமானதாகியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தல்களில் பின்னடைவுகளை சந்தித்திருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனமே உரித்தானது.
இந்த தேசிய பட்டியல் ஆசனத்தில் யார் பாராளுமன்றம் செல்வது என்ற இழுபறி நிலை மிக நீண்ட காலமாக காணப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் பலரினதும் வேண்டுக்கோளுக்கிணங்கி தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்குள் மீண்டும் வலுவானதொரு எதிர்க்கட்சி உருவாக்குவது குறித்து பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன தலைமையிலான குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களும் ரணிலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
கட்சி பதவிகளில் ஏற்பட்ட சர்ச்சையால் விரிசல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த ரவி கருணாநாயக்க , நவீன் திசாநாயக மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் கடந்த புதன்கிழமை சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அத்துடன் முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவருமான கரு ஜயசூரியவும் கடந்த புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
அடுத்து வரும் தேர்ல்களை மையப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்துடன் ஏனைய கட்சிகளையும் இணைத்து அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் முக்கிய தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே குறிப்பிடப்படுகின்றது.
மறுபுறம் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியுள்ளது. கட்சிக்குள் தீர்மானங்கள் எடுக்கும் போது அதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் நெருக்கமானவர்கள் தலையீடு செய்வதே இந்த முரண்பாடுகளுக்கு காரணமாகியுள்ளதாக முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.