இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் சீனாவின் கரிசனையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் உறவு இருந்தது. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அந்த உறவு தீவிரமடைந்தது. இதன் கட்டங்களாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிட்டி ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இந்த உறவு வளர்ச்சி தமது பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஏற்கனவே இந்தியா எச்சரிக்கை விடுத்த வந்தநிலையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார தேக்க நிலையில் “மீட்பாளராக” இந்தியா செயற்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் ஏற்படவிருந்த பொருளாதார திவால் நிலைகூட இந்தியாவின் நிதி உதவி காரணமாகவே தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் குறித்த உதவிகளின் தொடர்ச்சியாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியா சென்று வந்தார். இதனையடுத்து இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இதன்போது ஒரு பில்லியன் டொலர் கடன்வரிச் சலுகையை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் முனைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வரவுள்ளார். அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டாக் மாநாட்டில் பங்கேற்குமாறு இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நகர்வுகள் யாவும் நிச்சயமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உறவை பலப்படுத்தவுள்ளன. அதேநேரம் ஏற்கனவே இலங்கை விடயத்தில் சீனாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டதாக இந்தியா கொண்டிருந்த கவலையும் தற்போது தீர்ந்துள்ளது.
எனவே இலங்கையுடனான தற்போதைய உறவு நிலையை இந்தியா மீண்டும் ஒருமுறை கைநழுவ விடாது என்றே கருதப்படுகிறது. இதற்கு மத்தியில் தமது முதலீடுகளை இலங்கையில் விரிவாக்கியுள்ள சீனாவும் இலங்கையுடனான வர்த்தக உறவை தற்போதைய மட்டத்தில் மட்டுப்படுத்தப்போவதில்லை.
எனவே சீன அரசாங்கம் இலங்கையுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கங்களின் அடிப்படையில் புதிய முதலீடுகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்திய தலைவர்களின் பயணங்களுக்கு மத்தியில் சீன பிரதிநிதிகளின் பயணங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேநேரம் இலங்கையின் பிரதிநிதிகளும் சீனாவுக்கு செல்லும் வாய்ப்புக்களும் உள்ளன.
இலங்கை விவகாரத்தில் ஏற்கனவே அகலக் கால் ஊன்றியிருக்கும் சீனா, இந்தியாவின் மீள் வருகையை அடுத்து சீனா தனது அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.