முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இருந்து கருப்புச் சந்தை ஆயுதக் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்திருந்தார்.
முதலாவதாக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில் அங்கு இலங்கை சாதாரண வர்த்தகத்தில் ஈடுபடுவதையே அமெரிக்கா விரும்பவில்லை.
அப்படி இருக்கையில் ஆயுதக் கொள்வனவை அதுவும் கருப்பு சந்தையில் வடகொரியா மூலம் இருந்து இலங்கை அரசு பெற்றதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்பதை இலங்கை அரசுக்கு தெரியும்.
அப்படி தெரிந்திருந்தும் ஏன் பொறுப்பு வாய்ந்த நிதி அமைச்சர் இவ்வாறு தகவலை பகிரங்கமாக கூறினார் என்ற கேள்விக்கான பதில் மிகவும் முக்கியமானது. இத்தகவலை இவர் வெளியிட்டதன் மூலம் இரண்டாவதாக இன்னொரு பாரிய பிரச்சினை இங்கு காத்திருக்கின்றது.
அதாவது வட கொரியாவில் இருந்து இரசாயன ஆயுதங்கள் மற்றும் கொத்துக்குண்டுகள் போன்ற சர்வதேசரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை அரசு பெற்றுள்ளது என்ற பலமான குற்றச்சாட்டு இங்கு இலகுவாக வைக்கப்பட கூடியது.
எனவே இப்படி அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி வட கொரியாவில் இருந்து கள்ளச் சந்தையில் இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கியது என்ற குற்றச்சாட்டும், அதுவும் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கி தமிழ் மக்களை படுகொலை செய்யப் பயன்படுத்தி உள்ளது என்ற ஆழமான குற்றச்சாட்டும் இங்கு எழக்கூடிய நிலையில் ஏன் இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு உண்மையை அவிழ்த்துவிட்டார் என்ற கேள்வி பலமாக எழுகிறது.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களையும் கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தி தமிழ் மக்களைப் படுகொலை செய்தது என்கின்ற ஆழமான குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
வடகொரியா சட்டவிரோதமான முறையில் கள்ளச் சந்தையில் ஆயுதங்களை விற்பனை செய்திருப்பதனால் அவை இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளாக இருக்க முடியும் என்கின்ற கருத்து வலுவாக எழமுடிகிறது. இது கொத்துக் குண்டு வீசப்பட்டதற்கான ஒரு ஆதாரமாக முன்வைக்கப்பட கூடியதாய் இருக்கின்றது.
எந்த நாட்டிலிருந்து அல்லது நாடுகளிடமிருந்து இலங்கை அரசு இவ்வாறு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால் பசில் ராஜபக்ஷவின் தகவலின்படி அத்தகைய ஆயுதங்களை சட்டவிரோத கள்ளச் சந்தை வியாபாரத்தில் ஈடுபடும் வடகொரியாவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தெரியவருகிறது.
இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான தகவலை பசில் ராஜபக்ச வெளிப்படையாக முன்வைத்ததற்குப் பின்னணியாக ஒரு பலமான காரணமும் தேவையும் ஆளும் ராஜபக்ஷ குடும்பத்துக்கு உண்டு என்பது இங்கு பெரிதும் கவனத்துக்குரியது என்பதே உண்மை.
இலங்கை அரசு தற்போது பொருளாதார ரீதியில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இது இலங்கையை ஆளும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை பெரிதும் பாதிக்கப்படவல்லதாய் காணப்படுகிறது.
அரசியல் பொருளாதார நெருக்கடி என்பது பிரதானமாக வெளிநாட்டு கடன் சுமையிலிருந்து தோன்றியது. இத்தகைய கடன்சுமை பெரிதும் யுத்தகாலத்தில் ஏற்பட்ட கடன் பளுவில் இருந்து உருவெடுத்துள்ளது.
சிங்கள மக்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பெரிதும் வரவேற்கிறார்கள். புலிகளைத் தோற்கடித்து தம்மை ராஜபக்ச குடும்பம் காப்பாற்றியதாக சிங்கள மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.
புலிகளை அழிக்கவல்ல கொத்துக் குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் ஏனைய நாடுகளும் கொடுக்க முன்வராத நிலையில் வடகொரியா போன்ற சட்ட விரோத சந்தையைக் கொண்டுள்ள கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து இலங்கை அரசாங்கம் வாங்க நேர்ந்தது என்றும் அதனால் அதிக கடன் சுமை ஏற்பட்டது என்றும் சிங்கள மக்கள் கருதி ராஜபக்ஷாக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சகிப்புத் தன்மையுடன் நோக்கி ராஜபக்ஷ அரசாங்கத்தை காப்பாற்ற முற்படுவர்.
புலிகளை தோற்கடிப்பதற்காகத்தான் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு கள்ளச்சந்தையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தது என்பதை சிங்கள மக்களும், பௌத்த மகா சங்கமும், இராணுவமும், சிங்கள ஊடகங்களும், சிங்கள மக்களும் கருத்திற்கொண்டு ராஜபக்ச குடும்பத்தின் மீது அதிக பரிவுடன் காணப்படுவர்.
இதுதொடர்பான போர்க் குற்றச்சாட்டுக்களிலில் இருந்தும் ராஜபக்ஸாக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் எழுச்சி சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாகவே ஏற்பட்டுவிடும்.
எனவே மக்கள் ஆதரவு சரிந்துகொண்டு போகும் ராஜாபக்ஷ குடும்பத்தை தூக்கி நிறுத்தி அரியாசனத்தில் நிமிர வைக்க இத்தகைய தகவல் வெளியீடு அவசியமாக இருக்கிறது.
அரியாசனத்தில் பலமாக இழுத்துக்கொண்டால் பின்பு வெளிநாடுகள் கொடுக்கக்கூடிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பது சாத்தியமாகிவிடும். எதற்கும் முதல் தமது அரியாசனத்தை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே இவ்வாறு அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த கடுமையான உண்மையை அவிழ்த்து விட்டுள்ளார்.
இனி மகாசங்கம் இதனைப் பெரிதாக தூக்கிப்பிடித்து ராஜபக்சகளைப் பாதுகாக்க மக்களை ஒன்று திரட்டி இனப்படுகொலை, இனஅழிப்பு வாதத்தால் ராஜபக்சக்களை வலுவாக தூக்கி நிறுத்த இத்தகைய தகவல் பெரும் வாய்ப்பை வழங்கும்.
எப்படியோ இனப்படுகொலைவாத, தமிழின அழிப்புச் சகதிக்குள் சிக்குண்டு இருக்கும் சிங்கள பௌத்த இனம் இங்கு நீதி நியாயங்களை பற்றி ஒருபோதும் பேசப்போவதில்லை. தமிழ் மக்களை அழிப்பதற்கான ஒவ்வொரு செயலையும் அவர்கள் புனிதமானதாகவும் மேன்மையானதாகவுமே சிங்கள மக்கள் கருதுவர்.
அத்தகைய கருத்து நிலையானது குடும்பத்தின் அநீதிகளை மறைக்கவும் தமிழினத்தை மேலும் கொடுக்கவும் அது வழிவகுக்குமே தவிர ராஜபக்ஷ குடும்பத்துக்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்தான் இத்தகைய இரகசியத்தை எத்தகைய தயக்கமும் இன்றி வெளியிட்டுள்ளார்.
எனவே தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளை பெருமையுள்ள ஆதரிக்கும் சிங்கள அரசியல் கலாச்சாரப் பின்னணியில் தமிழ் மக்களுக்கு இனிமேல் ஏதாவது அற்ப சொற்ப உரிமைகளாகளாவது வழங்கப்படும் என்று யாராவது கற்பனை செய்தால் அது மிகப் பெரும் தவறாகும்.
சிங்கள மக்களின் மன விருப்பத்தை தெளிவாகப் புரிந்து கொண்டதன் பின்னணியில் இத்தகைய மோசமான குற்றச்செயலை எத்தகைய தயக்கமின்றி ஒரு முக்கிய அமைச்சர் சொல்லியிருக்கின்றார் என்பது ஆழ்ந்த கவனத்திற்குரியது.
அபாயகரமான தகவல்கள் , செய்திகள் தமிழ் மக்களை நோக்கி வெளிவந்துள்ளன என்பது கவனத்துக்குரியது.
ஒரு முக்கிய அமைச்சரால் இத்தகைய துணிச்சலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்ற செய்தியில் இருந்து எதிர்காலத்திற்கான சிங்கள அரசின் அரசியல் முன்னெடுப்புக்களை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.
அதாவது தமிழ்மக்களுக்கான விடிவும் போராட்டம் மிகவும் கடினமான பாதையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் அதிகமதிகம் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டிய காலம் இது என்பதை பெரிதும் கவனத்திற்கு எடுத்து செயல்பட வேண்டும்.