சுங்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதை மேற்பார்வையிட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றையும் நியமித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்கு வைத்தே, ஜனாதிபதியால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும், ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) பகல் நடைபெற்றது.
எதிர்வரும் உற்சவக் காலத்தின் போது, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி, அதற்காக தற்போதிருந்தே உரிய திட்டமிடல்களை வகுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறும் இதன்போது, குறுகிய எண்ணங்களுடன் அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அல்லது பொருட்களைப் பதுக்கி வைப்பதற்கோ இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்திய ஜனாதிபதி, இது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் மேற்பார்வைப் பணிகள், புதிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.
அமைச்சர்களான பசில் ராஜபக்ச, பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் நிதி அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.