அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வழக்குகளில் இருந்து அவர்கள் முற்றாக விடுதலை செய்யப்படும் நடவடிக்கைகளை அண்மைய காலமாக காண முடிந்தது.
இந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை தமக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட அரசியல் பழிவாங்கல்கள் என குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இவ்வாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்படுவது சம்பந்தமாக சமூகத்தில் விமர்சனங்கள் முன்வைப்பட்டு வருகிறது.
இவ்வாறான வழக்கொன்றை தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுத்துள்ள நீதிமன்றம் வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளது. கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கையே நீதிமன்றம் தள்ளுபடி செய்ய மறுத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக சதோச நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 500 லட்சம் ரூபாய் பெறுமதியான கெரம் மற்றும் சதுரங்க விளையாட்டு பலகைகளை வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமை்சசர் அளுத்கமகே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்து, தமது தரப்பு வாதியை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பது என முடிவு செய்துள்ளனர்.