நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் செயற்பாடு நேச நாடுகளை எதிரியாக்கும் வகையிலானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிடம் கறுப்பு பணத்தைக் கொண்டு ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் அண்மையில் கருத்து வெளியிட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்பிலேயே சம்பிக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நாட்டின் நிதி அமைச்சர் பகிரங்கமாக கூறுவது, எமக்கு எப்போதும் உதவி செய்யும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுடன் பகைமையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கட்டுப்பாடற்ற மோசமான வடகொரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடு ஒன்றே இலங்கை என்பதனை உலக நாடுகளின் எதிரில் ஒப்புக் கொள்வதாகவே நிதி அமைச்சரின் இந்தக் கூற்று அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் சொல்லும் விடயத்தின் அர்த்தம் புரியாத இவ்வாறான கூற்றுக்களினால் நாம் இன்னும் இந்த உலகில் ஓரங்கட்டப்படுவோம் எனவும் இதனால் மேலும் மின்சார துண்டிப்பு, எரிவாயு தட்டுப்பாடு போன்றனவே உருவாகும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.