ஜேர்மனியில், பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மருத்துவ உதவியாளர் ஒருவர், ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் அகதி ஒருவரை முகத்தில் குத்தும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.ஜேர்மன் அகதிகள் முகாம் ஒன்றில், 32 வயதான Amar H என்னும் சிரிய அகதி ஒருவர் குடிபோதையில் பொலிசாரை ஏணி ஒன்றைக்கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் தங்களைத் தாக்கியதால், அவரை கைது செய்ததாக அந்த பொலிசார் தெரிவித்திருந்தனர்.
Amar மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவரது முகத்தில் ஏற்பட்டுள்ள காயம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. Amarஉடைய கன்ன எலும்பு ஒன்றும் உடைந்திருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.அப்போதுதான் பொலிசார் வெளியில் சொல்லாமல் மறைத்த ஒரு விடயம் CCTV கமெராவில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Amarஐ ஸ்ட்ரெச்சர் ஒன்றில் வைத்து அசையமுடியாதபடி கட்டிவிட்டு, மருத்துவ உதவியாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.அந்த மருத்துவ உதவியாளர் ஓடி வந்து குத்துச்சண்டையில் குத்துவது போல, அசைய வழியில்லாமல் படுத்திருக்கும் Amarஐ முகத்தில் ஓங்கிக் குத்தும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.இந்த தகவல் வெளியானதும் Amarஐத் தாக்கிய மருத்துவ உதவியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்.தற்போது Amarஐத் தாக்கும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.