இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்களில் சீன பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வாளர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர் என இலங்கையில் இருக்கக்கூடிய சட்ட ஆய்வாளரும்,அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்குள் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்,இலங்கை அரசாங்கத்தின் நடப்பு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை முற்றுமுழுதாக சீனர்களின் நாடாக மாறியுள்ளது.சீனர்கள் இலங்கையில் உள்ள அமைச்சர்களிடம் வாய்த்தர்க்கம் செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.மிகுதியாக காணப்படும் சொத்துக்களும் விரைவில் சீனாவினால் சுரண்டப்படும்.
தற்போது சூடுபிடித்துள்ள இலங்கை அரசியலில் ராஜபக்சக்களின் குடும்ப அரசியலில் குடும்பத்திற்குள்ளேயே பல முரண்பாடுகள் எழுந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில்,சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் சிங்கள மக்களின் ஆதரவு பெருகி வருகின்றது.மறுப்பக்கம் ஜே.வி.பி தீவிரமாக வளர்ந்து வருகின்றது.இவை ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு பெரும் நெருக்கடியாக வளர்ந்துள்ளது.
தற்போது ஜே.வி.பி ஆட்சி பங்காளிகளாக மாறக்கூடிய நிலை உருவாகி வருகின்றது.மறுபுறம் குமார வெல்கம தலைமையில் புதிய அணியொன்று உருவாகி வருகின்றது.
தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில்,ராஜபக்சக்களின் ஆட்சி மூன்றாக பிளவடைந்து வெகு விரைவில் நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்லும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்