விரல்களுக்கு நிறத்தைக் கொடுக்க மருதாணி… முகத்தை பொலிவாக்க கற்றாழை… தோலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள்… அவ்வகையில் உதட்டிற்கு நிறத்தைக் கொடுக்க கொடிப்பசலை!… கூடவே குளிர்ச்சிக்கு பெயர்போன கொடிப்பசலை தாவரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பது, இப்போதைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு உகந்ததாக இருக்கும்.
கனிந்த கொடிப்பசலை பழங்களை விரல் நுனியில் சிதைத்து, ‘லிப்-ஸ்டிக்’ போல உதடுகளில் பூசிக்கொள்ள சிவந்த நிறத்தைக் கொடுக்கும். இப்போதிருக்கும் லிப்-ஸ்டிக் வகையறாக்களுக்கு பசலைப் பழங்களே முன்னோடி எனலாம். பசலையின் நிறத்திற்கு அதிலுள்ள ’ஆந்தோசையனின்கள்’ காரணமாகின்றன. உணவுகளில் சேர்க்கப்படும் இயற்கை சாயத்திற்கு (Natural dye) இதன் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பழங்களை வைத்து உதட்டில் சாயம் பூசி மகிழ்ந்த சிறுவயது கிராமத்து நினைவுகள் பலருக்கும் பசுமை மாறாக் கவிதை!
கொடிப்பசலையின் தாவரவியல் பெயர் Basella alba. இதில் பச்சை மற்றும் சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன. சிவந்த தண்டுடைய வகைக்கான தாவரவியல் பெயர் Basella rubra. Basellaceae குடும்பத்தை சார்ந்தது. சுண்ணச்சத்து, வைட்டமின்– A, இரும்புச்சத்து, Oxalic acid, Ferulic acid, அமினோ அமிலங்கள் போன்றவை பசலையில் இருப்பதால், உணவு முறையில் சேர்த்து வர ஊட்டத்தைப் பரிசளிக்கும்.
இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் இரத்தவிருத்திக்கு உதவும். குறைவான கலோரிகளுடன் நிறைவான நுண்ஊட்டங்களை வழங்குவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பசலை சிறந்த ஆயுதம். கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என்பன கொடிப்பசலைக்கு இருக்கும் பல்வேறு செல்லப்பெயர்கள்.
குளிர்ச்சிக்கு உத்தரவாதம்:
குளிர்ச்சித் தன்மையுடையதால், மழைக்காலங்களில் பசலைக் கீரையின் பயன்பாட்டினை குறைத்துக் கொள்வது நல்லது. கார்காலம் அல்லாத மற்றைய பெரும்பொழுதுகளில், இதன் இலைகளை பருப்பு சேர்த்து கடைந்து, மிளகு, சீரகம் சேர்த்து ருசியாக சாப்பிடலாம். வெப்ப நோய்களை உடனடியாக வேரறுக்கும் தன்மை பசலைக்கு இருக்கிறது.
பசலைக்கீரையை புளி நீக்கி சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வரலாம். ஆண்மையை அதிகரிப்பதற்கான இயற்கை ரெசிப்பி இது. ஆய்வுகளின் முடிவில் ‘டெஸ்டோஸ்டிரான்’ ஹார்மோனின் அளவை பசலை அதிகப்படுத்துவதாக (Increases Basal Testosterone production) தெரியவருகிறது. முறையற்ற மாதவிடாயை ஒழுங்குப்படுத்த, பசலையின் வேரை அரைத்து, அரிசி கழுவிய நீரில் கலந்து பருகுவது ஒரிசா மக்களின் வழக்கம்.
ஏப்ரல், மே மாதங்களில் உண்டாகும் வேனல்கட்டிகளுக்கு இதன் இலையை சிதைத்து கட்ட விரைவில் பலன்கொடுக்கும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும் தன்மை இருப்பதால் (Gastro protective activity), இதன் இலைச்சாறு ஒரு ஸ்பூனோடு, சிறிது வெண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தலைவலிக்கு, இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். கசகசாவோடு பசலை இலைகள் மற்றும் அதன் தண்டுகளை சேர்த்தரைத்து, நெற்றியில் பூச நல்ல உறக்கத்தை உண்டாக்கும். பசலை இலைச் சாற்றை முகத்தில் பூசிவர முகம் பளபளப்படையும்.
இதன் இலைகளையும் தண்டுகளையும் தண்ணீரிலிட்டு துழாவ, நீருக்கு குழகுழப்புத் தன்மை கிடைக்கும். குழகுழப்புத் தன்மையுடன் சூப் தயாரிக்க ஆசைப்படுபவர்கள், கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டண்ட் சூப் பவுடர்களுக்குப் பதிலாக, பசலை ஊறிய நீரை வைத்து, சூப் வகைகளை தயாரிக்கலாம். மிளகு, பூண்டு, சில காய்கள் கொண்டு சமைக்கப்படும் சத்துமிக்க ’உதான்’ எனப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பரிய சூப் வகையில் பசலை சேர்க்கப்படுகிறது. பலாக்கொட்டையோடு பசலையைக்கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு வகை, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் பிரபலம்.
பெரும்பாலான வீட்டு வேலிகளிலும் வீட்டிற்கு முன்பும் கொடியேறிக்கொண்டிருக்கும் ‘மணி-ப்ளாண்ட்’ எனும் அழகுத் தாவரத்திற்கு பதிலாக, பசலைக்கொடிக்கு வாய்ப்பு கொடுங்கள். அழகான செவ்விய/பசுமையான கொடி, உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க சரசரவென உருவெடுக்கும்.
-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)