கர்நாடக மாநில முன்னாள் டி.ஜி.பி சங்கர் பிதரியின் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து, அதன் மூலம் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி அவரது நண்பர்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்ட நாகாலாந்தைச் சேர்ந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீப காலமாக முகநூல் கணக்குகளில், ‘என் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிலிருந்து பணம் கேட்டால் யாரும் அனுப்பி வைக்க வேண்டாம்’ என்று பலரும் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. அதே போல, போலி முகநூல் கணக்கைத் தொடங்கி கர்நாடக மாநில முன்னாள் டிஜிபியின் நண்பர்களிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில டி.ஜி.பியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சங்கர் பிதரி. பணியில் இருந்த போது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட படையின் தலைவராக செயல்பட்டதன் மூலம் சங்கர் பிதரி கர்நாடகா முழுவதும் பரவலாக அறியப்பட்டார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் ஈடுபட்டவர், அடிக்கடி கட்சி மாறியதன் மூலம் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் சங்கர் பிதரியின் மின்னஞ்சல் முகவரியை ஹேக் செய்து, அதன் வாயிலாகப் போலி முகநூல் கணக்கு ஒன்றைத் தொடங்கினர். பிறகு, ’எனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்து உதவுங்கள்’ என்று சங்கர் பிதரியின் முகநூலிலிருந்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. இதைப் பார்த்த சங்கர் பிதரியின் நண்பர்களும் உறவினர்களும் மர்ம நபர்கள் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால், ஒருவர் மட்டும் சந்தேகம் கொண்டு சங்கர் பிதரியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
அதன் பின்னர்தான் சங்கர் பிதரியின் பெயரில் மோசடி நடப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசர் மேற்கொண்ட வழக்கு விசாரணையில், நாகாலாந்தைச் சேர்ந்த தியா என்னும் ரூகா ( 37 ), செரோபா ( 27 ) , ஈஸ்டர் கோன்யாக் ( 27 ) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நான்கு செல்போன் மற்றும் வெவ்வேறு பெயர்களில் வாங்கப்பட்ட 13 பான் கார்டு, 6 ஆதார் கார்டு, 2 ஏடிஎம் கார்டு, 20 க்கும் மேற்பட்ட வங்கி ஆவணங்கள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சங்கர் பிதரியின் மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்து, ஹேக் செய்து, அதன் மூலம் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் வசூல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கைதான மூன்று பேர் மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் வல்லுநர்கள், “மின்னஞ்சல் மற்றும் முகநூல் கணக்கு பாஸ்வோர்டுகளை எளிதாக இல்லாமல் கடினமாக இருக்கும்படி பயன்படுத்த வேண்டும் என்றும் முக்கிய மின்னஞ்சல் கணக்குகளுக்கு Multi-factor authentication ஐப் பயன்படுத்த வேண்டும்” என்று எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக ஐ.பி.எஸ் அதிகாரி ஹரிசேகரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி இதேபோன்று மோசடி நடந்தது குறிப்பிடத்தக்கது.