கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, இந்தியா சீனாவை தொடர்ந்து மற்றுமொரு நாட்டிடம் கடன்கோருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை ஜப்பானிடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது. ஜப்பானில் இருந்து பெறப்படும் கடன் ஜப்பானிய யெனில் வழங்கப்படும் என்பதோடு 0.05 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ள நிலையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இந்த தொகை சில மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்படுகின்றது.
அத்தோடு ஜனவரி 18ல் 500 மில்லியன் டொலர் மற்றும் ஜூலையில் 1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவது உட்பட, இந்த ஆண்டு 6 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
பணப்புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்து குறிப்பாக உலக வங்கி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மேலும் கடன்களை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது ஜப்பானிடமும் கடன்பெற முயற்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.