இதுவரை காலமாக நாட்டின் அரசியலை தீர்மானித்தது விடுதலைப் புலிகளின் போராட்டமே. யுத்தத்தை வைத்தே அரசியல் செய்யும் நிலைமை இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசியல் பொறிமுறையில் மாற்றம் அவசியமாகியுள்ளது. தற்போது மாற்றத்தை நோக்கிய அரசியல் கலாசாரம் உருவாகிக் கொண்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.
இத்தனை ஆண்டுகால சம்பிரதாய அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு மக்கள் மாற்றுச் சிந்தனையில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
மக்கள் புத்திசாலித் தனமான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இன, மத, மொழி, பிரசாரங்களை செய்து இனியும் தேர்தலில் வெற்றிப்பெற முடியாது.
அந்த சிந்தனையில் இருந்து மக்கள் விடுபட்டு வாழ்வாதாரம் குறித்து சிந்திப்பதற்கு ஆரம்பித்து விட்டனர். நாட்டின் இளம் தலைமுறையினர் பாரிய அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேறும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே புரட்சி ஒன்றுக்கான ஆரம்பம் தெளிவாகத் தென்படுகின்றது.
எனவே கடந்த காலத் தவறுகளை நிர்வத்தி செய்யக் கூடிய கட்டாயம் எமக்கு உள்ளது. எனவே அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் ஒன்றிணைவோம்.
ஒன்றை கவனிக்க வேண்டும், இதுவரை காலமாக நாட்டின் அரசியலை தீர்மானித்தது விடுதலைப் புலிகளின் போராட்டமே. யுத்தத்தை வைத்தே அரசியல் செய்யும் நிலைமை இருந்தது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் முதல் தடவையாக பிரிவினைவாதத்தை தாண்டி குடும்ப அரசியலை வீழ்த்த வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் நல்லாட்சியை உருவாக்கினர்.
தற்போது மக்கள் அந்த நிலைப்பாட்டையும் தாண்டி சென்றுள்ளனர். கூட்டணி அரசாங்கம் குறித்து இனியும் சிந்திக்க முடியாது. இந்தக் கூட்டணிகளின் பேச்சு எல்லாம் அரசாங்கத்தை அமைக்கும் வரையில் தான்.
அதற்கு பின்னர் தனி அரசாங்கமே ஆட்சியை தீர்மானிக்கின்றது. ஆகவே இனியும் இந்தக் கலாசாரம் இருக்கக் கூடாது. ஆகவே இளம் தலைமுறையினரே இப்போது தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.