ஆசிரியர்கள் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி 20 – 12-2022 ஆம் திகதிக்குள் அதிகரிக்க வேண்டும் இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தீலீசன் எச்சரிக்கை தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
நேற்று (31-12-2021) யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், எமது நீண்டகால பிரச்சினையாக காணப்பட்ட சம்பள முரண்பாட்டை தீர்ப்பதாக அரசு கூறியுள்ளது.
இருப்பினும், இன்று வரை சம்பள முரண்பாட்டை பகுதியாக தீர்ப்போம் என கூறிய அரசு, இன்னமும் அது தொடர்பாக வர்த்தமானியை வெளியிடவில்லை. அரசு கூறியது போன்று ஜனவரி மாதம் 20ஆம் திகதி மூன்றில் ஒரு பங்கு சம்பள முரண்பாடு தீர்க்கப்பட வேண்டுமானால், ஜனவரி 5-12-2021 ஆம் திகதி அதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட வேண்டும்.
இன்று வரை குறித்த செயற்பாடு நடைபெறவில்லை. கடந்த 24 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இம் முறை அரசு தாம் வழங்கிய வாக்குறுதியை சம்பள அதிகரிப்பில் காட்டவில்லை என்றால் நாம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
அரசாங்கம் தற்போது தேவையில்லாமல் சொந்த ஆடம்பரத்துக்காக செலவழித்து வருகிறது. பொருளாதார கொள்கை இல்லாமல் தான் நாட்டு இப்போது பாதாளத்தை நோக்கி செல்கிறது.
இதேவேளை, படித்தவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தாமல், இராணுவத்தை அரச நிர்வாக கட்டமைப்பில் கொண்டு வந்துள்ளமையால் நாடு இராணுவ ஆட்சிக்குள் சென்றுள்ளது.
மேலும், தங்களுடைய விடயங்களை மூடி மறைப்பதற்காக, மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளனர். மாதம் 35 ஆயிரத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். ஆனால், அரசும் அரசு சார்ந்தவர்களும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர் என்றார்.