கேரள மாநிலம் திருச்சூர் பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளங்குழந்தை பிணம் கிடந்தது.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பரமக்காவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அந்த குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகி இருந்தது தெரியவந்தது. குழந்தையை கொன்று கால்வாயில் வீசி சென்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் புழக்கல் பகுதியை சேர்ந்த இளம்பெண் மேகா என்பவர் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மேகாவும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து குழந்தையை கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
மேகாவுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் அதே பகுதியை சேர்ந்த இமானுவேல் (வயது25) என்ற வாலிபரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இதில் மேகா கர்ப்பம் அடைந்தார்.
இதனை மேகா வீட்டுக்கு தெரியாமல் மறைத்துவிட்டார். பிரசவ நாள் நெருங்கியதும், அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு கடந்த 19-ந்தேதி அவருக்கு குழந்தை பிறந்தது.
குழந்தையுடன் வீட்டுக்கு சென்றால் மாட்டிகொள்வோம் என்பதால் மேகா குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார்.
குழந்தை பிறந்த மறுநாளே மேகா, அக்குழந்தையை தண்ணீர் வாளியில் அமுக்கி கொன்று விட்டார். பின்னர் குழந்தையின் பிணத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு எடுத்து சென்றார். மறுநாள் குழந்தையின் பிணத்தை காதலன் இம்மானுவேல் மற்றும் இன்னொரு நண்பரிடம் கொடுத்தார். அவர்கள் பிணத்தை அருகில் உள்ள கால்வாயில் வீசி சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் மேகாவையும், அவரது காதலன் இம்மானுவேலையும் கைது செய்தனர். இவர்களுக்கு துணை புரிந்த நண்பரும் பிடிப்பட்டார். அவரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.