தமிழகத்தில் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு உறுதியளித்தபடி கொழுந்தியாவை திருமணம் செய்து கொடுக்காத நபர் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள முத்துபழநியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு அறிவழகன், முருகன் என இரண்டு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர்.
இந்நிலையில், பாலசுப்பிரமணி வடமாநிலங்களில் பாட்னர் முறையில் பைனான்ஸ் செய்து தனது பங்குத் தொகை லாபமாக பெற்று வந்துள்ளார்.லாபத்தை சேமிக்க அறிவழகனிடம் பாலசுப்ரமணியம் யோசனை கேட்டுள்ளார். அப்போது அறிவழகன், ஒரே வங்கிக்கணக்கில் சேமித்தால் வருமான வரி பிரச்சனை வரும் என்பதால் 4 அல்லது 5 கணக்காக பிரித்து வங்கியில் பணம் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்று யோசனை கூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட பாலசுப்பிரமணி, அறிவழகன் அவரின் மனைவி கலைச் செல்வி, மற்றொரு நண்பர் முருகன் மற்றும் பாலசுப்பிரமணியின் பெயரில் இரண்டு என மொத்தம் 5 வங்கிக்கணக்குகள் புதிதாக துவங்கியுள்ளார்.அதன் பின், வங்கிக்கணக்கு விவரங்கள், ஏ.டி.எம் கார்டுகள், பண பரிவர்த்தனை போன்றவற்றை அறிவழகனே செய்து வந்துள்ளார்.அதோடு, முருகன் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனியாக பைனான்சும் பாலசுப்ரமணியம் செய்து பார்த்துள்ளார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியின் தந்தை இறந்து போக, பாலசுப்ரமணிக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர்.அந்த சமயத்தில் அறிவழகன் தன் கொழுந்தியாவை அதாவது கலைச்செல்வியின் தங்கையான முத்துலட்சுமியை பாலசுப்ரமணிக்கு திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.கொடைக்கானலில் இருந்து பெற்றோரோடு வந்த முத்துலட்சுமியும் பாலசுப்ரமணியை பார்த்து திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வடமாநிலத்திற்கு மிண்டும் சென்று பைனான்ஸ் தொழிலை பாலசுப்ரமணி செய்து வந்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை, வழக்கம்போல் அறிவழகனுக்கு அனுப்பியுள்ளார்.திருமணத்திற்காக, 45 பவுன் நகைகள் வரை முத்துலட்சுமி மூலமாக கேட்டு அதையும் அறிவழகன் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். இந்த விஷயங்கள் எல்லாம் மற்றோரு நண்பரான முருகனிடத்தில் பாலசுப்ரமணி பகிர்ந்து கொண்டுள்ளார்.சில மாதங்களுக்கு பிறகு முத்துலட்சுமியின் தொலை பேசியிலிருந்து பாலசுப்பிரமணியனுக்கு பேசிய கலைச்செல்வி தன் தங்கை வேறு ஒருவரை காதலிக்கிறார்.
இதனால் நீங்கள் வேறு ஒரு பெண் பார்த்து கொள்ளுங்கள்’ என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.எவ்வளவு பேசியும் அறிவழகன் குடும்பத்தினர் சம்மதிக்காததால், பாலசுபரமணி தான் அனுப்பிய ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் 45 பவுன் நகை போன்றவைகளை திருப்பி கொடுங்கள் என்று கேட்க, அதற்கு அறிவழகன் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர்.
இதனால், மிகுந்த வேதனையடைந்த பாலசுப்ரமணி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். பாலசுப்பிரமணிக்கு ஆதரவாக மற்றோரு நண்பர் முருகன் இருந்ததால், விஷயம் ஊராருக்கு தெரிய வந்தது.அதன் பின் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி, கண்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.