பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (04) இரவு கல்முனை பகுதியில் அமைந்துள்ள இரு வேறு இடங்களிற்கு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் விஜயம் மேற்கொண்டார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் மக்கள் கருத்தறியும் செயலமர்வுகள் கிழக்கு மாகாணம் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற நிலையில் நேற்று மாலை இவர் தலைமையிலான குழுவினர் கல்முனை பகுதிகளுக்கு விஜயம் செய்தனர் .
இதன்போது கல்முனை தாருஸ்ஸபா நிறுவனத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்த இக்குழுவினர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனை முஸ்லிம் முக்கியஸத்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.இதன் போது கல்முனை வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் உட்பட சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் இதன் போது கல்முனையின் சமகாலத்தேவைகள் பற்றிய மகஜரொன்றும் இவரிடம் கையளிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டர். எனினும் அங்கு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஞானசார தேரரை இடைமறித்து ஊடகவியலாளர்கள் விஜயத்தின் நோக்கம் தொடர்பில் வினவினர்.
இதன் போது ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். முஸ்லீம்கள் விடயத்தில் பல்வேறு விடயங்களை தற்போது புரிந்து கொண்டுள்ளேன். இதனூடாக இனிவரும் காலங்களில் ஒரு நாடு ஒரே சட்டம் என்ற விடயதானத்தின் ஊடாக அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலனிக் குழுவில் வழங்கப்படும் பரிந்துரைக்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதே வேளை கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவுக்கும் சென்று அதனையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் தாருஸ்ஸபா நிறுவனத்தின் தலைவர் மெளலவி ஸபானிஸ் உஸ்தாத் சபா முஹம்மத், ஜனாதிபதி செயலணி உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர், ஞானசாரர் தேரர் மற்றும் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பரிந்துரைக் குழுவினர் மற்றும் கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், மற்றும் வபா பாரூக், நசீர் ஹாஜியார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.