அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடனான கலந்துரையாடும்போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
ராஜபக்க்ஷ அரசாங்கம் நாடு தற்போது கடன் சுமையில் சிக்கியுள்ள நிலையில் கடன்களில் இருந்து மீள்வதற்கு வழிவகை செய்யவில்லை. மாறாக அந்த சுமையை மக்கள் மீது சுமத்தியிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான பாரிய மின் தடைகள் ஏற்படாதவாறு நாம் பார்த்துக் கொண்டோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களால் மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நான் பெருநகர அபிவிருத்தி அமைச்சராக மற்றும் மின்சக்தி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்காக பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினேன். மின் சக்தி அமைச்சராக இருந்தபோது தலைமை அலுவலகத்தில் தமிழ் மொழியை தெரிந்த தகுதியானவர்களை அதிகம் உள்வாங்கினேன்.
பெருநகர பிரதி அமைச்சராக இருந்தபோது யாழ்.மாநகர சபைக்கு புதிய கட்டடத்தை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீட்டை வழங்கினேன். அதோடு யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இணைப்பு நகரத்தை உருவாக்குவதற்கான செயற் திட்டத்தினை தயாரித்தேன்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் அனைத்து இன மக்களும் வெறுப்படைந்துள்ளனர். எனவே மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் தயாராக வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க கூறினார்.