தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் அங்குள்ள பிரபலமான முருகன் ஆலயம் ஒன்று வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுதவிர காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது.
நெல்லை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஓடுவதால் தண்ணீர் இரைச்சலுடன் ஆர்ப்பரித்தவாறு செல்கிறது. குறுக்குத்துறை முருகன் கோவில் மேல் மண்டபத்தை மூழ்கடிப்பது போல் தண்ணீர் செல்கிறது.
கோவிலுக்கு செல்லும் பாலத்தை தண்ணீர் முழுமையாக மூழ்கடித்தது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு போல் மாறி காட்சி அளிக்கிறது.
நெல்லை மேலநத்தம் -கருப்பந்துறை இடையே தாமிரபரணி ஆற்றில் தரைப்பாலம் அமைந்துள்ளது. ஆற்றில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர் இந்த பாலத்தின் மேல்பகுதியை தொட்டபடி பாய்ந்தோடுகிறது.
இந்நிலையில் அங்கு இரும்பு தடுப்புகளை வைத்து சாலையில் பாதி அளவுக்கு பொலிஸார் அடைத்து உள்ளனர். பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தால் முழுமையாக போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.