இந்தியா – திரிபுராவின் கொவாய் மாவட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியதில் பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கொவாய் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரஜிப் சென்குப்தா கூறியதாவது:
கொவாய் மாவட்டத்தின் ஷெவ்ரதாலி கிராமத்தில் பிரதீப் தேப்ராய் என்பவர் தனது வீட்டில் தனது இரண்டு மகள்கள் மற்றும் தம்பியை இரும்புக் கம்பியால் திடீரென தாக்கினார். இதில் மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். பிறகு மனைவியை தாக்கி காயப்படுத்திய அவர், சாலையில் சென்ற ஓர் ஆட் டோவை நிறுத்தினார்.
ஆட்டோ டிரைவர் மற்றும் அதிலிருந்த அவரது மகனை பிரதீப் தாக்கினார். இதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். அவரது மகன் பலத்த காயமடைந்தார். இவரும் பிரதீப்பின் மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், பிரதீப்பை கைது செய்ய முயன்றனர். பொலிஸாரையும் பிரதீப் தாக்கினார். இதில் இன்ஸ்பெக்டர் சத்யஜித் முல்லிக் பலத்த காயமடைந்தார். அகர்தலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு ரஜிப் சென்குப்தா கூறினார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் குமார் நேற்று கூறும்போது, “பிரதீப் தேப்ராய் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.