எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எல்லைதாண்டிய மீன்பிடி முறையை கைவிடுவதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த நிலயைில் அமைச்சர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனை பொறுத்திருந்துதான் நாங்கள் பார்க்க வேண்டும். ஏனென்றார் இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சினை. நான் ஜனநாயக தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டதிலிருந்து இந்த பிரச்சினைக்க தீர்வு காண வேண்டும் என்று நானும் முன்னெடுத்து வந்தேன். இரண்டு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடார்த்திக்கொண்டிருக்கின்றேன்.
ஆனால் பேச்சுவார்த்தையில் ஓர் இணக்கப்பாடு வரவில்லை. அதே நேரத்தில் நான் மூன்று வகையான அணுகுமுறைகளை முன்னெடுக்கின்றேன். ஒன்று இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை. இரண்டாவது, இந்த தடை செய்யப்பட்ட தொழில் மற்றம் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் பாதக நிலை தொடர்பில் இரண்டு பக்கங்களிற்கும் விழிப்புணர்வூட்டுதல். மூன்றாவது முறைமை சட்ட நடவடிக்கை.
சட்ட நடவடிக்கை எனும்பொழுது கைது செய்வதாகும். இந்த கைது செய்கின்ற நடவடிக்கைகளின்புாது துர்ரதிஸ்டவசமாக இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. அது கவலைக்குரிய விடயம்தான். இருந்தாலும், நாங்கள் பொட்டம் ரோளிங்கிற்கு எந்த வகையிலும் இடம் கொடுக்க முடியாது. அதனை ஏதோவொரு வகையில் தடுத்தேயாவேன்.
இந்திய தரப்புகள் இவ்விடயத்தில் கூடுதலான முயற்சிகள் எடுப்பதாக கேள்விப்படுகின்றேன். அது வரவேற்கத்தக்கது. கடந்த வருடம் மகிந்த ராஜபக்ச தலைமையில் நானும் புது டெ்லிக்கு சென்றபொழுது, இந்திய பிரதமர் மோடிக்கும், இந்திய வெளிவிவசாக அமைச்சர் ஜெயசங்கரிடமும் ஒரு திட்டம் கையளிக்கப்பட்டது.
குறித்த திட்டம் சிறந்தது எனவும், அது தொடர்பில் பேசி முடிவுக்கு வருவோம் என அவர்கள் தெரிவித்தனர். துர்ரதிஸ்டவசமாக கொரோனா வந்தபடியினால் அப்படியே விடுபட்டுவிட்டது. எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளிற்கு பின்னர், அத்துமீறிய மீன்பிடி பெருமளவில் குறைந்துள்ளது. அப்படியிருந்தும் ஒரு சில வந்து செல்வதாக தகவலும் உள்ளது. அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்படை தலைமை அதிகாரியுடன் இவ்விடயம் தொடர்பில் பேசியிருந்தேன்.
இவ்வாறான நிலையை நாங்கள் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது எனவு்ம, இதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவருக்கு விளக்கியிருந்தேன். தாம் தமது கடமைகளை செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் மீனவர்களின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர் வினவினார்,
இதுபோன்று பல அறிவிப்புகள் வந்து போயுள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த அறிவிப்பும் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. அதனை நீங்கள்தான் எமக்கு சொல்கின்றீர்கள். அந்த அறிவிப்பினை நான் இன்னும் கேள்விப்படவில்லை. தொலைபேசிகளை பார்த்திருந்தால்தான் அந்த அறிவிப்பு எனக்கு வந்திருக்கும். பார்த்துதான் என்னால் அதனை சொல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எல்லைதாண்டிய மீன்பிடி முறையை கைவிடுவதாக தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.