இணையவெளியில் சிறாா் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மத்திய புலாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் உள்ள 77 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் சி.பி.ஜோஷி கூறியதாவது:
இணையவெளியில் சிறாா் ஆபாச படங்களைப் பதிவிடுவோா், பகிா்வோா், பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ அமைப்பைச் சோ்ந்த சிறப்பு விசாரணைப் பிரிவு கண்காணித்து வருகிறது.
அந்த பிரிவு அளித்த விவரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் 83 பேருக்கு எதிராக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளின் அடிப்படையில் குழந்தைகள் தினமான 14 ஆம் திகதி சிபிஐ நடவடிக்கையைத் தொடங்கியது.
அதைத் தொடா்ந்து, சிபிஐ அலுவலா்கள் 400 க்கும் மேற்பட்டோா் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று 14 மாநிலங்களில் உள்ள 77 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினா்.
தமிழ்நாடு, ஆந்திரம், தில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், குஜராத், பிகாா், ஹரியாணா, ஒடிஸா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் ஆகிய 14 மாநிலங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் திருவள்ளூா், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூா் ஆகிய நகரங்களில் சோதனை பெற்றது.
இந்தச் சோதனைகளின் முடிவில், 10 பேரை சிபிஐ அலுவலா்கள் கைது செய்தனா். கைதானவா்களிடம் இருந்து சிறாா் ஆபாச படம் பகிா்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். சிபிஐ சோதனை தொடா்வதால் கைதாவோா் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிபிஐ-யின் சிறப்பு பிரிவு சமூக ஊடங்களை ஆய்வு செய்ததில், 50 க்கும் மேற்பட்ட குழுக்களில் 5,000 க்கும் மேற்பட்டோா் சிறாா் ஆபாச படங்களைப் பகிா்ந்துள்ளது தெரியவந்தது. அந்த குழுக்களில் இலங்கை, பாகிஸ்தான், கனடா, வங்கதேசம், நைஜீரியா, இந்தோனேசியா, ஆஜா்பைஜான், அமெரிக்கா, சவூதி அரேபியா, யேமன், எகிப்து, பிரிட்டன் ஆகிய வெளிநாடுகளைச் சோ்ந்த பலா் உள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பிற விசாரணை அமைப்புகளின் உதவியை சிபிஐ நாடியுள்ளது என்றாா் அவா்.