ஓசூர் அருகே, பெண்ணைத் திருமணம் செய்து தருகிறேன் என்று கூறி பெங்களூர் இளைஞர் ஒருவரை ஆளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று, பெண்ணின் தந்தை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகேயுள்ள கான்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், 50 வயதாகும் நாராயண செட்டியார். இவர் பெங்களூரு ஜே.பி நகர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். ஜே.பி நகரில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வசித்து வரும் நாராயண செட்டியாருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
நாராயண செட்டியாரின் காய்கறி கடை அருகே பெங்களூரைச் சேர்ந்த வசந்த் எனும் 25 வயது இளைஞரும் காய்கறி கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தார். வசந்துக்கும் நாராயண செட்டியாரின் இரண்டாவது மகளான சௌமியாவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் நாராயண செட்டியாருக்குத் தெரியவர கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதலைக் கைவிடும்படி நாராயண செட்டியார் பல முறை எச்சரித்தும், வசந்த் கேட்காமல் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தன் மகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்த நாராயண செட்டியார், ‘என் மகளை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் வா’ என்று கூறி ஓசூர் அருகேயுள்ள தனது சொந்த ஊரான கான்றபள்ளிக்கு வரவழைத்துள்ளார். கான்றபள்ளிக்கு வந்த வசந்த், அங்கு சௌமியா இல்லாததைக் கண்டு சத்தம் போட்டுள்ளார். அங்கு அவருக்கும் நாராயண செட்டியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகராறில் உருட்டுக் கட்டை, கல் ஆகியவற்றால் வசந்தைத் தாக்கி நிலைகுலையச் செய்த நாராயண செட்டியார் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
இது குறித்து, தகவல் அறிந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், நாராயண செட்டியார் கொலை செய்தது தெரியவர அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.