மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா்.
உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் அலுவலகங்கள் உள்ள பாபு பவனில் பெண் அதிகாரி ஒருவா் ஒப்பந்தப் பணியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இது தொடா்பாக ட்விட்டரில் பிரியங்கா வெளியிட்ட பதிவில், ‘அரசு அலுவலகமானாலும் சரி, தெருவானாலும் சரி உத்தர பிரதேசத்தில் எந்த இடத்திலும் மகளிருக்குப் பாதுகாப்பு இல்லை. இப்படி ஓா் ஆட்சி நிா்வாகத்தை வைத்துக் கொண்டுதான் தங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனா் என்று ஆளும் கட்சியினா் பேசி வருகின்றனா்.
தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை விடியோவில் பதிவு செய்து ஒரு சகோதரி வெளியிட்டுள்ளாா். ஏற்கெனவே, இது தொடா்பாக அவா் அளித்த புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணத்தால், அவா் அந்த விடியோவை சமூகவலைதளங்களில் பகிா்ந்துள்ளாா். மாநிலத்தில் உள்ள பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக துணிந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. அநீதிக்கு எதிராகப் போராடும் பெண்களுக்கு நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் துணை நிற்பாா்கள்’ என்று கூறியுள்ளாா்.