தஞ்சையில் முன் விரோதம் காரணமாக ரவுடியைக் கடத்திக் கொலை செய்த கும்பல், தலையைத் துண்டித்து அம்மன் கோயில் வாசலிலும், உடலை தண்டவாளத்திலும் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகேயுள்ள ரெட்டிப்பாளையம், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். ௧௯ வயதேயாகும் சுப்ரமணியனின் மகன் மணிகண்டன் மீது காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பகுதியில் உள்ள முத்துராமன் என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் முத்துராமனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், மணிகண்டனுக்கும் முத்துராமனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் திங்கள் கிழமையன்று நீதிமன்ற வழக்கு விசாரணைக்குச் சென்றார் மணிகண்டன். அதன் பிறகு, நள்ளிரவு நேரத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிக்குச் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, முத்துராமன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனைக் கடத்தி ரெட்டிப்பாளையம் புது ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்துக்குத் தூக்கிச் சென்றனர்.
அங்கு, முத்துராமனும் அவரது நண்பர்களும், மணிகண்டனை சரமாரியாக வெட்டி துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்தனர். கொலை செய்த பிறகும், ஆத்திரம் தீராத அந்த கும்பல் மணிகண்டனின் உடலைத் தண்டவாளம் அருகே வீசிவிட்டு, தலையை வெட்டிக் கையில் எடுத்துச் சென்று மணிகண்டன் வீட்டுக்கு அருகேயுள்ள அம்மன் கோயில் வாசலில் போட்டுவிட்டுச் சென்றனர். கொலை செய்த கும்பல் இத்துடன் நிறுத்தாமல், மணிகண்டனைக் கொன்று தலையைக் கோயில் வாசலில் போட்டுள்ளதாகக் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தலையையும், உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் முத்துராமனையும் அவரது கூட்டாளிகளையும் தேடிவருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக, கடத்திக் கொலை செய்து தலையைக் கோயில் வாசலிலும், உடலை தண்டவாளத்திலும் போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..!