சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Pillayan) பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணிகள்மீண்டும் அபகரிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு (2020) மட்டக்களப்பு வெளிமாவட்டங்களை சேர்ந்த சிங்கள மக்கள் பாரிய காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை குறித்த காணி அபகரிப்புக்கு எதிராக பண்ணையாளர்கள் மேற்கொண்ட போராட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனால் (Shanakiya Rasamanickam) தொடரப்பட்ட வழக்கு, மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்ததினால் இந்தக் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
கடந்த வாரம் (2020) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பிள்ளையான் (Pillayan) பண்ணையாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக மயிலத்தமடு மாதவனை பகுதிக்குச் சென்று பண்ணையாளர்களின் பிரச்சினையை கேட்டு அறிந்து கொண்டதுடன், இந்த மேய்ச்சல் தரை காணிகள் தொடர்பாக பல வாக்குறுதிகளையும் அளித்திருந்தார்.
இதேவேளை பண்ணையாளர்கள் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த அடுத்த நாளே வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் பலர் மீண்டும் கால்நடைகளின் மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து காடுகளை அழித்து காணிகளை துப்பரவு செய்து கூடாரங்களை அமைத்து வருவதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (Pillayan) வருகையின் பின் பெரும்பான்மை இனத்தவரின் காணி அபகரிப்பு அதிதீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அங்குள்ள பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களை பிள்ளையான் வந்து சந்தித்தது தங்களுடைய மேச்சல் தரைக் காணியை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் பிள்ளையானின் மாதவனை வருகையின் பின் அதிகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் காணி அபகரிப்புக்கு பிள்ளையான் என்ன பதில் கூறப்போகிறார் என? பண்ணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிழக்கை மீட்கப் போறோம் என்று கூறியவர்கள் இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் காணிகளையும் மாற்று இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளதாக அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.