நேற்று (04) மாலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரட்டை வாய்க்கால் களப்பு பகுதி, நந்திக்கடல் – வட்டுவாகல் பாலம், நாயாறு களப்பு பகுதிகளுக்கு சென்று அங்கு மீனவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்தார்.
இரட்டை வாய்க்கால் களப்பு பகுதிக்கு சென்ற அமைச்சர் அங்கு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நந்திக்கடல் – வட்டுவாகல் பாலத்திற்கு வருகை தந்த அமைச்சர், மீனவர்களிடமும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் கலந்துரையாடினார். இதன்போது நந்திக்கடல் ஆழமாக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் இதனை விரைவுபடுத்துமாறும் நந்திக்கடல் களப்பில் இடம்பெறும் சட்டவிரோத தொழில்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்களும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நாயாறு களப்பு பகுதிக்கு சென்ற அமைச்சர், மீனவர்களிடமும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளிடமும் கலந்துரையாடினார். இதன்போது நாயாறு பாலத்துக்கு அண்மையாகவுள்ள பகுதிக்கு மின்விளக்குகள் பொருத்தித் தருமாறும் குறித்த பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்க்கு மிக விரைவில் தீர்வுகளை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச கட்டிடத்தில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.