எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறை இன்று காணமல்போகும் நிலையில் இருக்கிறது. எனினும் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும் எண்ணெய் குளியல் சம்பிரதாயமாக நடைபெறுகிறது.
ஆனால் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலுக்கு என சில தினங்களை குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம்.
அதோடு ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது என்றும் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
எண்ணெய் குளியலின் அவசியம்:
நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது.
இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
எண்ணெய் குளியல் செய்ய சரியான நேரம்:
காலை இதமான வென்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம் கூடாது.
கடுமையான வெய்யிலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது.
பலன்கள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த வளையம் இருப்பதால் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது.
மேலும் உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும், ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
தலை முடி நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், என்பதுடன் எலும்புகள் பலப்படும்.
பெண்களுக்கு:
ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.
திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.
வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.
வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
ஆண்களுக்கு:
திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்.
செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு கண்ட மாலை நோய் வரும்.
வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.
வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.
சனி, புதன் நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்.
குளியலுக்கு உகந்த எண்ணெய் எது?
உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெய்களின் குளிர்மை சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும்.
மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் பிரத்யேக எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.