முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் இந்திக்க அனுருத்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கண்ணி வெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணியினை பொது மக்களிடம் கையளித்துள்ளனர்.
இந் நிகழ்வு இன்று (03) காலை 10 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றது.
யுத்த காலத்தில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் முன்னரங்க பிரதேசமாகவும் முகமாலை பிரதேசம் காணப்பட்டது.
இதன் காரணமாக அதிகளவு கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிக்காத வெடிப்பொருட்கள் நிறைந்த பிரதேசமாக காணப்பட்ட முகமாலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் தற்போது கண்ணி வெடி அகற்றப்பட்டு பாதுகாப்பான பிரதேசமாக உறுதிப்படுத்தப்பட்ட 316 ஏக்கர் பரப்பளவு நிலம் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.