தான் அமைச்சராக கடமையாற்றும் எந்தவொரு அமைச்சிலும், மோசடிக்காரருக்கு இடமளிக்கக் மாட்டேன் என்றும், ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வெகுஜன ஊடகத்துறை அமைச்சிற்கு உட்பட்ட செலசின் நிறுவனம் மற்றும் ஐ டி என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
செலசின் நிறுவனத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தனக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்த அமைச்சர், அது தொடர்பான தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மிக விரைவில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், ஐ டி என் தொலைக்காட்சி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் தனக்கு வேறு வழிகளில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக பக்கச்சார்பின்றி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.