இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினதும் மக்களுக்கு சரியான முறையில் தெளிவுப்படுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவுச் செயலாளருடன் இன்று முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியமாகும்.
இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துல்லியமாக அடையாளம் காணப்பட வேண்டும்.
தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக அடையாளம் காண்பதுடன், மீனவச் சமுதாயத்துக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமது எதிர்பார்ப்பார்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டின் போது புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாக அவர் குறிப்பிட்டார். யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவுடனான தொடர்புகள் பற்றி எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கி, கிரமமான அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குமாறு, இந்திய வெளிவிவகார செயலாளர், ஜனாதிபதியை அறிவுறுத்தியுள்ளார். தமிழ் மக்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக, இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.