இந்தியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலிற்கும், இலங்கையிலுள்ள வலையமைப்பிற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி, கேரளாவின், வாழக்காலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரூ .12 கோடி மதிப்புள்ள 1.1 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கும்பல் அதன் நிதியாளர்களுக்கு சுமார் 10% கமிஷனாகக் கொடுப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.கலால் மற்றும் சுங்கத் துறைகளின் கூட்டு நடவடிக்கையில், இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் கைதாகியது.
போதைப்பொருளை வாங்குவதற்கும் கடத்துவதற்கும் இந்த கும்பல் ரோட்வீலர் மற்றும் டோபர்மேன் நாய்களுடன் சென்னைக்கு பயணம் செய்து வந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களின் மொபைல் போன்களில் கும்பலுடன் தொடர்புடைய சில இலங்கைப் தொலைபேசி எண்கள் மற்றும் சென்னையில் உள்ள வேறு சிலரின் தொலைபேசி எண்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழக – கேரள கடலோர பகுதிகளிற்குள்ளால் இந்தியாவிற்குள் அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதும் தெரிய வந்துள்ளது.
மலேசியாவில் உள்ள தமிழ் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் சென்னையை மையமாக வைத்து கடத்தல் குழுவொன்று இயக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் கைதானவர்களிற்கும், அந்த சென்னைக்குழுவிற்குமிடையிலான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. மலேசிய கடத்தல்குழுவிற்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய வலையமைப்பிற்குமிடையிலான தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
“கேரளாவில் கைதானவர்களிற்கு இலங்கையில் இருந்து சில தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
இந்த போதைமருந்து அதிக அளவில் இலங்கையிலிருந்து பெறப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். தமிழகத்தில் உள்ள காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.
விரைவில் சில முடிவுகளைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று ஒரு அதிகாரி கூறினார். அண்மையில், குஜராத்தின் எல்லையோர கடலில் ஹெரோயினுடன் ஈரானிய குழு கைது செய்யப்பட்டது.
இவர்கள், கேரளாவின் கொச்சி கரையில் போதைப்பொருட்களை பரிமாற திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
இலங்கை கடற்படை ஆழ்கடல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதால், அவர்களிடம் சிக்க நேரிடும் என்ற அச்சத்தில், ஈரானிய குழு இரண்டு நாட்கள் குஜராத் கடலில் காத்திருக்க வேண்டியிருந்தது.
இது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.