கொரோனா வைரஸ் தொற்று எதிராக நாடாளவிய ரீதியில் வீடு வாசல், ஊன் உறக்கம் இன்றி சுகாதார துறையினர், முப்படையினர், முன்களப் பணியாளர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென மனுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வளவுக்கும் சாப்பாட்டுக் கடைகள் உட்பட மக்களது அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் கடைகள் தொடர்ந்து பூட்டப்பட்டுள்ளன. குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசியக் கடமைகளுக்காக வெளியே வரலாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி வீதிகளில் திரிந்தார்களென நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்களென பொலிஸ் பேச்சாளர் கூறுகிறார். ஏற்கனவே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்ட அன்று சுகாதார விதிமுறைகளைப் பேணாமல் நெருக்கியடித்து மனுபானம் வாங்கிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் ஒரு கொத்தணி உருவாகினால் அது இந்த சாராயக் கொத்தணியாகத் தான் இருக்கும். கொரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் மக்களின் உயிர் முக்கியம் நாங்கள் திறக்காமல் இருப்போம் என்று எண்ணாமல் பணத்தை பிரதானமாக எண்ணி சாராயக் கடைகளை திறந்தவர்களை என்னவென்பது? இதில் உருவாகும் கொரோனா கொத்தணியால் சாகப் போவது ஒன்றும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளும், கர்ப்பிணித் தாய்மார்களும், படுக்கையில் இருக்கும் முதியோர்களும் தான்.
இந்தப் பழி இவர்கள் கங்கையில் மூழ்கினாலும் திருப்பதிக்கு சென்றாலும் சும்மா விடாது. கொரோனா தொற்றால் சாகிறமோ இல்லையோ குடித்துக் குடித்து எதிர்காலத்தில் சாகப் போகிறோம் என்று தெரிந்தும் மனைவி, குழந்தைகளை மறந்து குடியே முக்கியம் என்று சாராயக் கடை வாசல்களில் விழுந்து கிடக்கும் மதுப் பிரியர்களை என்னவென்று சொல்வது? இவர்களுககெல்லாம் என்னத்துக்கு குடும்பம் குழந்தைகள்?
உயிரைப் பணயம் வைத்து சுகாதார பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களின் ஆலோசனை பெறப்படாமல் சாராயக் கடைகள் திறந்தமையானது அவமானப்படுத்தும் செயலாகும். வேறு வழியில்லை.
போதையால் நாசமாகிய குடும்பங்களுக்காக போதையை விற்கும் மற்றும் ஊக்குவிக்கும் சகலரது குடும்பங்களும் நாசமாக வேண்டும் என்று நானும் கடவுளை தினமும் கும்பிடுகிறேன். நீங்களும் வீடுகளில் இருந்து தினமும் பிரார்த்தியுங்கள் என வைத்தியர் யோகராஜா யதுநந்தன் மூகநூலில் பதிவிட்டுள்ளார்.