திருகோணமலை கந்தளாய் பகுதியில் மனைவியை கணவன் கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்திய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சந்தியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தனது மனைவியை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த கணவன் வழி மறித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும், குத்தியும் படுகாயம் ஏற்படுத்தியுள்ளார். இதன்போது அந்த இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபர் மனைவியை வெட்டுவதை கண்டு மீண்டும் திரும்பி சென்றுள்ளதை அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காணொளிகள் காட்டுகின்றன. சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.