மேற்காசிய போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூலை இறுதி வரை நீட்டிப்பதாக எயார் இந்தியா தெரிவித்துள்ளது.
மே மாதத் தொடக்கத்தில் ஜூன் வரை இஸ்ரேலுக்கான விமானங்களை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்த எயார் இந்தியா, போர் பதற்றம் நீடிப்பதால் தற்போது அதனை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கியது முதலே பல நாடுகளின் விமான சேவைகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தன.
வான்வழி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் அதிக எரிபொருள் செலவு போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன.
போர் தொடங்கியபோது ஏப்ரல் வரை விமான சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அது ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் பிராந்திய வான்வழியைத் தவிர்த்து வருகின்றனர். இஸ்ரேலிலும் சில விமான நிறுவனங்கள் மட்டுமே சேவை வழங்கி வருகின்றன.
இதனால், வெளிநாடு செல்வதற்கு அங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எயார் இந்தியா விமான சேவை நிறுத்தத்தால் இஸ்ரேலிலுள்ள 40,000 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட சில விமானங்களும் மிக அதிக விலை சொல்வதால், தொழிலாளர்களாக இருப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

